புத்தளம் – நவகத்தேகம பகுதியில் புதையல் தோண்டினார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், நவகத்தேக பகுதியில் உள்ள கல்வங்குவ – முல்லேகம மற்றும் புலபிடிகம ஆகிய இரண்டு பிரதேசங்களில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கல்வங்குவ – முல்லேகம பகுதியில் ஐவரும், புலபிடிகம பகுதியில் ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய வெற்றிலை, பூக்கள் உள்ளிட்ட பூஜைப் பொருட்களும் மண்வெட்டி, கோடரி, சவள் , ஒரு தொகை வயர்கள் உள்ளிட்ட ஆயுத பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவகத்தேகம, ஆண்டிகம, கல்கமுவ மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நவகத்தேகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பெதும் குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.