அடுத்த ஆண்டு முதல் தேசிய அட்டையில் இடம்பெற இருக்கும் மாற்றம்!

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை முறைமை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் அதிபரின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய நிதியில் வழங்கப்படும் குறித்த அடையாள அட்டையில், கண் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் உயிர்த் தகவல்கள் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது 76 சுயவிபரங்கள் கோரப்பட்ட நிலையில், தற்போது புதிய டிஜிட்டல் அடையாள அட்டையைப் பெற 6 சுயவிபரங்கள் மட்டுமே கோரப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, ​​பெயர், முகவரி, பிறந்த திகதி, பாலினம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கட்டாயம் அளிக்க வேண்டும்.

புதிதாக அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கி அதன் பிறகு படிப்படியாக ஒட்டுமொத்த சமூகத்திற்கும் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதே அரசின் நோக்கமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.