சபா நாயகன் திரைவிமர்சனம்

அசோக் செல்வன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சி.எஸ். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் சபா நாயகன். அசோக் செல்வனின் கதை தேர்வு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், சபா நாயகன் எப்படிப்பட்ட திரைப்படமாக இருக்கும் என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.

கதைக்களம்
நண்பர்களால் சபா என அழைக்கப்படுபவர் ஹீரோ அரவிந்த் [அசோக் செல்வன்]. நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அசோக் செல்வன், தனது பள்ளி பருவத்தில் ஈஷா என்ற பெண்ணை காதலிக்க துவங்குகிறார்.

நண்பர்கள் உதவியுடன் தனது காதலை ஈஷாவிடம் சொல்ல பல முறை முயற்சி செய்தபோதும், அவரால் சொல்ல முடியவில்லை. இறுதியில் தனது காதலை ஈஷாவிடம் கூறினாரா இல்லையா? அதற்காக அவரும், அவருடைய நண்பர்கள் அனைவரும் சேர்த்து எடுத்த முயற்சிகள் என்னென்ன, இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்
அறிமுக இயக்குனர் சி.எஸ். கார்த்திகேயன் எடுத்துக் கொண்ட கதைக்களம் சிறியதாக இருந்தாலும், அதை திரைக்கதையாக சொன்ன விதம் அருமையாக இருந்தது. நகைச்சுவை சில இடங்களில் ஒர்கவுட் ஆனாலும், இன்னும் சில இடங்களில் சிரிப்பு வரவில்லை.

முதல் பாதியில் சற்று தொய்வு, ஆனால் இரண்டாம் பாதி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. காதல் கதையை இப்படியும் திரையில் காட்டலாம் என இயக்குனர் சி.எஸ். கார்த்திகேயன் அணுகிய முறைக்கு பாராட்டுக்கள்.

ஆனால், அது நம்முடன் கனெக்ட் ஆகவில்லை என்பதே படத்தின் மைனஸாக அமைந்துவிட்டது. இதனால், பல பிளஸ் பாயிண்ட் இருந்தாலும் கூட, படம் நம்முடன் கனெக்ட் ஆகவில்லை என்பதனால் ஏமாற்றத்தின் பக்கம் தள்ளப்படுகிறோம்.

கதாநாயகன் அசோக் செல்வன் நடிப்பு அருமையாக இருந்தது. பள்ளி, கல்லூரி அதன்பின் வந்த காட்சிகள் அனைத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். அதே போல் நடிகைகள் கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மெகா ஆகாஷ் அனைவரும் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரங்களில் அழகாக நடித்துள்ளார்கள்.

ஹீரோவின் நண்பர்களாக வரும் அருண், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் க்ரிஷ் ஆகியோரின் நடிப்பு கலகலப்பாக இருந்தது. மேலும் மறைந்த நடிகர் மயில்சாமியின் நடிப்பு பக்கா. ஒளிப்பதிவு ஒரு பக்கம் படத்திற்கு பக்கபலமாக உதவினால், மறுபக்கம் எடிட்டிங் சிறப்பாக இருந்தது.

பிளஸ் பாயிண்ட்

அசோக் செல்வன் நடிப்பு

இயக்குனர் திரைக்கதையை வடிவமைத்த விதம்

கார்த்திகா முரளிதரன், சாந்தினி, சௌத்ரி, மெகா ஆகாஷ் நடிப்பு

அருண், ஜெய் சீலன் சிவராம், ஸ்ரீராம் க்ரிஷ், மயில்சாமி நடிப்பு

ஒளிப்பதிவு, எடிட்டிங்

முக்கிய இடங்களில் ஒர்கவுட் ஆன நகைச்சுவை

மைனஸ் பாயிண்ட்

முதல் பாதி தொய்வு

கனெக்ட் ஆகாத விஷயங்கள்

மொத்தத்தில் சபா நாயகன் இளைஞர்களை கவருவான்.