அமைச்சரின் செயலாளர் என கூறி பணமோசடியில் ஈடுபட்டவர் கைது!

இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் செயலாளர் என தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் விவசாய துறையில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி, காலி மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளில் உள்ள இருவரிடம் தலா 3 இலட்சம் ரூபா வரை பெற்றுக்கொண்டதாக குறித்த நபர் மீது அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் நாளைய தினம் மாத்தறை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் இஸ்ரேலில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்காக எவரேனும் பணம் வழங்கி இருந்தால், 011 286 42 41 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியப்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.