மொபைல் SMS ஊடாக நடைபெறும் நிதி மோசடி தொடர்பில் இலங்கை தபால் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது . இது தொடர்பாக தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மோசடி செய்பவர்கள் வங்கி அட்டை விபரங்களை மோசடி மூலம் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி எஸ்.எம்.எஸ்
இலங்கை தபால், இலங்கை தபால் திணைக்களம், SL Post போன்ற அடையாளங்களையும், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்ற இணையத்தளத்தையும் பயன்படுத்தி இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாம் குறுஞ்செய்தி மூலம் வங்கி விவரங்களைக் கோருவதில்லை என்றும் பொதி அனுமதிக்கு வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வதில்லை என்றும் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே மோசடி செய்பவர்கள் அனுப்பும் போலி எஸ்.எம்.எஸ்.களின் அடிப்படையில் தங்கள் வங்கிக் கணக்கு அல்லது வங்கி அட்டை விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.