ரசவாதி திரைப்பட விமர்சனம்

அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் சாந்தகுமார் இயக்கியிருக்கும் ”ரசவாதி” திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.

கதைக்களம்
கொடைக்கானலில் சித்த வைத்திய சாலை நடத்தி வரும் அர்ஜுன் தாஸ், ஹோட்டல் மேனேஜராக புதிதாக வேலைக்கு சேர்ந்த தன்யா ரவிச்சந்திரனுடன் நட்பாக பழகுகிறார்.

ஒரு கட்டத்தில் இருவரும் காதலில் விழுந்து ஒன்றாக பயணிக்கின்றனர். ஆனால், அதே கொடைக்கானலுக்கு இன்ஸ்பெக்டராக பணிக்கு சேர்ந்த சுஜித் ஷங்கருக்கு, ஹீரோ அர்ஜுன் தாஸ் மகிழ்ச்சியாக இருப்பது கோபத்தை தூண்டுகிறது.

இதனால் அவர்கள் இருவரையும் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்கிறார். அவர் ஏன் அர்ஜுன் தாஸ் மீது கோபத்தில் இருக்கிறார்? இருவரும் என்ன பிரச்சனை? இறுதியில் அர்ஜுன் தாஸ் எப்படி பிரச்சனையை முடிக்கிறார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
முதல் காட்சியிலேயே கொலைகார போலீஸ் அதிகாரியாக அறிமுகமாகும் சுஜித், தனது சைக்கோத்தனத்தை ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்துவது மிரட்டல்.

அதேபோல் படம் முழுவதும் காலினை இடறி நடக்கும் சதாசிவபாண்டியன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சண்டைக்காட்சிகளில் மிரட்டும் அவர் இந்த படம் மூலம் ஆக்ஷ்ன் ஹீரோவாக உருவெடுப்பார் என்பது போல் அட்டகாசம் செய்திருக்கிறார்.

தன்யா ரவிச்சந்திரன், G.M.குமார், ரம்யா உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

படத்தில் பிரச்சனை என்னவென்றால் முதல் பாதிவரை கதை தொடங்கவே இல்லை என்பது தான். கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளை மட்டுமே முதல் பாதி காட்டியிருக்கிறார் இயக்குநர்.

ஆங்காங்கே சமூகநல கருத்துக்களை பேசினாலும் இந்த கதைக்கு அவை ஒட்டாத ஒன்றாகவே தனியாக தெரிகிறது.

தமனின் இசையும், ஒளிப்பதிவும் படத்தை ரம்யமாக காட்டுகின்றன. படத்தின் நீளம் அயற்சியை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை

க்ளாப்ஸ்
கண்களுக்கு விருந்தளிக்கும் ஒளிப்பதிவு

ஹீரோ, வில்லனின் மிரட்டலான நடிப்பு

தமனின் இழையோடும் இசை

பல்ப்ஸ்
இரண்டாம் பாதியில் தொடங்கும் கதை

படத்தின் நீளம்

மொத்தத்தில் பொழுதுபோக்கிற்காக ஒருமுறை பார்க்கலாம் என்ற வரிசையில் இணைந்திருக்கிறது இந்த ”ரசவாதி”.

ரேட்டிங் 3/5