இந்தியன் 2 திரை விமர்சனம்

28 ஆண்டுகள் கழித்து பல போராட்டங்களுக்கு பின் இன்று உலகளவில் வெளியாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் லைகா இப்படத்தை தயாரித்துள்ளது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் திரை விமர்சனத்தை பார்ப்பதற்கு முன், இந்தியன் முதல் பாகத்தின் கதை சுருக்கத்தை பார்த்துவிட்டு வரலாம்.

இந்தியன் முதல் பாகம் : யார் இந்த சேனாபதி
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவர் சேனாபதி (கமல்). நேதாஜியின் படையில் முக்கிய நபராக திகழ்ந்து வந்த சேனாபதி, போரில் வெள்ளையர்களிடம் பிடிபடுகிறார்.

இவர்களுக்கு சந்திரபோஸ் ‘சந்துரு’ மற்றும் கஸ்தூரி சேனாபதி என இரு பிள்ளைகள். இதில் மூத்த மகன் சந்துரு குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து அரசாங்க வேலையில் சேர நினைக்க, அவரை கண்டிக்கிறார் தந்தை சேனாபதி. இதனால் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்று விடுகிறார் சந்துரு.

இதன்பின் வீட்டில் திடீரென நடக்கும் விபத்தில் நெருப்பில் சிக்கிக்கொள்ளும் கஸ்தூரி உடல் கருகிய நிலையில் உயிர் போராடிக் கொண்டிருக்கிறார். மருத்துவமனையில் லஞ்சம் தந்ததால் மருத்துவம் பார்ப்பேன் என மருத்துவர் கூற, ‘நான் ஏன் லஞ்சம் தரவேண்டும், அதை கொடுக்க மாட்டேன்’ என கூறுகிறார் சேனாபதி.

இதனால் அவருடன் மகள் இறந்து போகிறார். நேர்மையாக இருந்ததற்காக கிடைத்த பரிசா என்னுடைய மகளின் இறப்பு, இதன்பின் லஞ்சம் ஊழல் என்கிற வார்த்தை தமிழ்நாட்டில் கேட்க கூடாது, இதனால் யாரும் பாதிக்கப்பட கூடாது என முடிவு செய்யும் சேனாபதி மீண்டும் நேதாஜி வழியில் செல்ல முடிவு செய்கிறார்.

தன்னிடம் லஞ்சம் கேட்ட ஒவ்வொரு அதிகாரிகளையும் கலையெடுக்கிறார் சேனாபதி. தொடர்ந்து பல அரசு அதிகாரிகளின் மரண செய்தியால் இந்தியன் தாத்தாவின் மீது அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பயம் ஏற்படுகிறது.

இப்படியொரு சூழ்நிலையில், சந்துரு லஞ்சம் வாங்கிக்கொண்டு செய்த தவறால் பல உயிர்கள் இறந்து போய் விடுகிறது. இதனால் தனது மகனையே கொள்ள முடிவு செய்கிறார் சேனாபதி. இறுதியில் லஞ்சம் வாங்கி தவறு செய்த தனது மகனை கொலை செய்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார். ஆனால், மீண்டும் தவறு நடந்தால் இந்தியன் வருவான் என இறுதியில் எச்சரித்து இருந்தார்.

இந்தியன் 2 : Zero Tolerance
கதைக்களம்
சித்தார்த் மற்றும் அவரது நண்பர்கள் பிரியா பவானி ஷங்கர், ஜெகன் உடன் இணைந்து சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்க வேண்டும் என போராடுகிறார்.

Youtube சேனல் மூலம் இதை நகைச்சுவையுடன் சேர்த்து செய்து வரும் சித்தார்த் ஒரு கட்டத்தில் நம்மால் எதுவுமே செய்ய முடியாது, இதற்கு இந்தியன் தாத்தா தான் வரவேண்டும் என முடிவு செய், இந்தியனை தேடும் பயணத்தில் இறங்குகின்றனர்.

#comebackindian என்கிற டேக்கை வைரலாக்கி இங்கு நடக்கும் லஞ்சம் ஊழல் போன்ற விஷயங்களை இந்தியன் சேனாதிபதிக்கு தெரிவிக்கின்றனர். உலகில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இந்தியனுக்கு இது தெரியவரும் என தொடர்ந்து முயற்சி செய்ய, தைவானில் இருக்கும் சேனாபதி மீண்டும் இந்தியா செல்ல வேண்டும் என முடிவு செய்கிறார்.

இந்தியாவிற்கு 28 ஆண்டுகள் கழித்து வரும் வீரசேகரன் சேனாபதியை பிடிக்க வேண்டும் என போலீஸ் ஒரு புறம் இருக்க, லஞ்சம் ஊழல் செய்பவர்களை விட்டு வைக்க கூடாது என இந்திய வரும் சேனாதிபதி என்னென்ன இன்னல்களை சந்தித்தார்? இதன்பின் நடக்கப்போவது என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்
உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் குறை சொல்ல முடியுமா! அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் நம்மை சிந்திக்கவும் சிலிர்க்கவும் வைக்கிறது. அவர் நடிப்பில் குறை கண்டுபிடித்தால், குறை கண்டுபிடிக்கும் நபர்களிடம் தான் இனிமேல் நடிப்பை கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தியன் முதல் பாகத்தில் தமிழ்நாட்டில் நடந்த லஞ்சம் ஊழலை சுட்டிக்காட்டி படம் எடுத்திருந்த ஷங்கர், இரண்டாம் பாகத்தில் இந்தியா முழுக்க சேனாபதி சென்றால் என்ன நடக்கும் என்பதை பிரமாண்டமாக காட்டியுள்ளார்.

சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, ஜெகன் உள்ளிட்டோர் கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் சூப்பர். அதே போல் மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு ஆகியோரை இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பார்க்க முடிந்ததே மகிழ்ச்சியாக இருந்தது. எஸ்.ஜே. சூர்யா சில நிமிடங்கள் தான் வருகிறார். அடுத்த பாகத்தில் தான் அவருடைய மொத்த வில்லத்தனம் வெளிப்படும்.

கதைக்களம் சமுதாயத்தை சரி செய்ய வேண்டும் என்ற கருத்து இருந்தாலும், திரைக்கதை சற்று வலுவாக இருந்திருக்கலாம். அது படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு கொடுக்கிறது.

கமல் ஹாசன் பேசும் விஷயங்கள் தேசப்பற்றுடன் இருந்தாலும், இந்த காலத்து 2K கிட்ஸுக்கு அது எந்த அளவிற்கு போய் சேரும் என தெரியவில்லை. அட்வைஸ் செய்தாலே ‘பூமர்.. பூமர் அங்கிள்’ என சொல்லும் இந்த காலத்து 2K கிட்ஸ் இடம், இந்தியன் தாத்தா காட்டு கத்து கத்தினாலும் கிரிஞ்ச் என சொல்லி விடும் நிலை தான் தற்போது இருக்கிறது.

VFX காட்சிகளை மிரட்டலாக காட்டியுள்ளார் ஷங்கர். கமல் ஹாசன் – பாபி சிம்ஹா சேசிங் காட்சி, கிளைமாக்ஸ் சண்டை காட்சி, Prosthetic makeup என அனைத்தும் பக்காவாக செய்துள்ளனர்.

அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிரட்டலாக இருந்தது. முதல் பாகத்தில் ஏ.ஆர். ரஹ்மான் போட்டிருந்த பின்னணி இசையை கூட இரண்டாம் பாகத்தில் அனிருத் பயன்படுத்தியுள்ளார். அது செம மாஸாக இருந்தது. அதே போல் ரவிவர்மன் ஒளிப்பதிவு மாபெரும் பிரமாண்டம். முத்துராஜ் கலை இயக்கம் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

பிளஸ் பாயிண்ட்

கமல் ஹாசன் நடிப்பு

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு

கலை இயக்கம், ஒளிப்பதிவு, Prosthetic makeup, VFX என அனைத்து டெக்னிகல் விஷயங்கள்

கிளைமாக்ஸ் சண்டை காட்சி

கமல் ஹாசன் – பாபி சிம்ஹா சேசிங் காட்சி

மைனஸ் பாயிண்ட்

படத்தின் நீளம்

மொத்தத்தில் இந்தியன் 2 நம்மை சிந்திக்க வைத்து, இந்தியன் 3யை எதிர்பார்க்க வைத்துள்ளது.