சிறைக் கைதிகளுக்கான விசேட சந்தர்ப்பம்!

இன்று 119வது சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு, சிறைக்கைதிகளுக்கு திறந்த வெளியில் விருந்தினர்களை பார்ப்பதற்கு விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைவாக இன்று (16) கைதிகளின் உறவினர்களால் கொண்டுவரப்படும் ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதார பொருட்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாய்க குறிப்பிட்டார்.

இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை இன்று முதல் மட்டுப்படுத்த சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மூளைக் காய்ச்சலால் கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் கடந்த 13ஆம் திகதி உயிரிழந்துள்ளதுடன் பிரேத பரிசோதனையில் அவர் மூளை காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், மூளைக் காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று கைதிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.