சஜித்திற்கு உயிர் அச்சுறுத்தலா!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளின் அறிக்கையின் அடிப்படையில் சஜித்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை
எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் சட்டத்தரணி நிசத் விஜேகுணவர்தன ஆகியோர் இந்த கோரிக்கையை, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கைக்கு அமைவாக சபாநாயகர், பொலிஸ் மா அதிபரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து இது குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் எதிர்க்கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தமக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து தகவல் கிடைக்கப் பெற்ற போதும் சிலர் இவ்வாறு கூறியிருந்ததாக லக்ஸ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

அச்சுறுத்தல்
இந்த அச்சுறுத்தல் குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் கடிதங்கள் அனுப்பி வைத்த போதிலும் பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் குஜராட்டில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் தீவிரவாத சந்தேக நபர்களின் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்திற்கு காணப்படும் ஆபத்து குறித்து தெரியவந்துள்ளது என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த அச்சுறுத்தல் குறித்து ஆராய்ந்து எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு சபாநாயகர், பொலிஸ் மா அதிபரை அறிவுறுத்தியுள்ளார்.