ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்களுக்கு அரச செலவில் விமானப்படை உலங்குவானூர்திகள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்காக அதனை பயன்படுத்த முடியாதென தேர்தல் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவிக்கையில், “அரச விமானங்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தினால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும்.
எவ்வாறாயினும், ஏனைய தேர்தல் அல்லாத உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு விமானங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நபர்கள் அரசாங்க விமானங்களைப் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச பேருந்துகள் மற்றும் தொடருந்துகளை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தினால் அதற்கும் பணம் செலுத்தி பற்றுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அரசாங்க சொத்துக்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்துதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இம்முறை தேர்தல் தொடர்பில் ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.