ரணிலுக்கு கருணைத் தொகை வழங்க தயார்

எதிர்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓய்வு பெற்றதன் பின்னர் தனது வாழ்வாதாரத்திற்கான கருணைத் தொகையை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் மாதாந்த வருமானத்தைப் பார்க்கும் போது தமக்கு வருத்தமாக இருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

நாட்டின் சாமானிய மக்கள் வாழ முடியாத நிலையில் இவர்கள் வாழ்வது ஆச்சரியமளிப்பதாகவும், இவர்கள் அனைவரும் கறுப்புப் பொருளாதாரத்தில் அங்கம் வகிப்பதாகவும் வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அனுராதபுரம் கட பனஹ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வேட்பாளர் திலித் ஜயவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் மாத வருமானம் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது.

இதில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இலஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவலுக்கமைய இந்த தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டாவது அதிகூடிய மாதாந்த வருமானம் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச எனவும் அவரது மாத வருமானம் 13 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணைக்குழுவிடம் தமது சொத்துக்கள் மற்றும் கடன்களை சமர்ப்பிக்க வேண்டிய முதல் சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.