தென்கிழக்கு ஐஸ்லாந்தில் பனிப்பாறை சரிந்து வீழ்ந்ததில் சுற்றுலா சென்றவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ள நிலையில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்கிழக்கு ஐஸ்லாந்திலுள்ள ப்ரீடாமெர்குர்ஜோகுல் பனிப்பாறை பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை (25) சுற்றுலா வழிகாட்டியுடன் 25 பேர் கொண்ட குழுவினர் சென்றுள்ளனர்.
ஐரோப்பாவின் மிகப் பெரிய தேசிய பூங்கா
ஐரோப்பாவின் மிகப் பெரிய தேசிய பூங்காக்களில் ஒன்றான சுமார் 5,460 சதுர மைல் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள வட்னஜோகுல் தேசிய பூங்காவின் ஒரு பகுதியாக இந்த பனிப்பாறை உள்ளது.
சுற்றுலாப்பயணிகள் பனிப்பாறையில் உள்ள பனி குகைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை ஆராய்ந்து கொண்டிருந்த போது பனிப்பாறை சரிந்து வீழ்ந்துள்ளது. பனிப்பாறை சரிந்து வீழ்ந்ததில் 4 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில் இருவர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் ஐஸ்லாந்தின் தேசிய பல்கலைக்கழக வைத்தியசாலையான லேண்ட்ஸ்பிடலின்னுக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலும் காணாமல் போன சுற்றுலா பயணிகள் இருவரையும் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகின்றது.