சௌமியமூர்த்தி தொண்டமானின் ஜனன தின நிகழ்வு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த தலைவர், அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம் இன்று(30) அனுஷ்டிக்கப்பட்டட்டுள்ளது.

கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர்கள், உப தலைவர்கள், முன்னாள் பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் உப்பட முக்கியஸ்தர்கள் என பலர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வின் பின்னர் கட்சி தலைமையகமான சௌமியபவனின் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

அத்துடன், கொட்டகலையில் உள்ள சி.எல்.எப் வளாகம் உட்பட மலையக பகுதிகளிலும் ஜனன தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

சுதந்திர இலங்கையில் உருவான முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்தவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்.

இலங்கை, இந்திய காங்கிரஸ்
இலங்கை, இந்திய காங்கிரஸ் உருவாக்கத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய அவர் அதன் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

இலங்கை, இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது முதல் அதன் தலைவராக செயற்பட்டார்.

மேலும், முக்கிய பல அமைச்சுகளை வகித்துள்ளார். இலங்கையில் சிறந்ததொரு தேசிய தலைவராகவும் செயற்பட்டார்.