துபாயில் வேலை பெற்று தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

துபாயில் (Dubai) வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கேகாலை (Kegalle) – ருவன்வெல்ல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ருவல்வெல்ல நகரில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடாத்தி வந்த நிலையில் இந்த தொழில் மோசடியை மேற்கொண்டுள்ளார்

அங்கு டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 இலட்சத்துக்கும் அதிகமான ரூபாவை சந்தேக நபர் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் இதற்கு முன்னரும் மினுவாங்கொடை பிரதேசத்தில் வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை நடாத்திக்கொண்டு பணத்தை மோசடி செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் பணியகம் குறிப்பட்டுள்ளது.

சந்தேகநபரை ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.