பட்டங்களை பயன்படுத்தி மின் உற்ப்பத்தி!

உயரத்தில் பறக்கும் பட்டங்களைப் பயன்படுத்தி வீட்டு உபயோகத்திற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் (University of Colombo) வானியல் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன (Santha Jayarathna) தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் (Nuwara Eliya) அண்மையில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம் உற்பத்தி
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ” திருவிழாவின் போது நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது பொதுவானது என்றாலும், நுவரெலியாவில் இந்த நோக்கத்திற்காகப் பட்டங்களைப் பயன்படுத்துவது ஒரு புதிய முயற்சியாகும்.

இந்த யோசனை இலங்கைக்கு புதியது. எனினும் இது ஏற்கனவே அமெரிக்காவில் (US) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு உயரப்பறக்கும் ஒரு பட்டத்தின் மூலம் குறைந்தது 4 வீடுகளுக்கான மின்சாரம் பெறப்படுகிறது.

கொழும்பு பல்கலைக்கழகம்
இலங்கையில் இந்த முயற்சியை முன்னெடுப்பதற்கு, இலங்கை முழுவதும் உள்ள பட்டம் பறக்கவிடும் சங்கங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும்.

இந்த திட்டத்தின் ஊடாக 500 மீற்றருக்கு மேல் உயரத்தில் பறக்கும் பட்டங்களின் மூலம் 1,800 டெராவோட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

இதன்படி, எதிர்காலத்தில் மின்சார உற்பத்திக்கான புதிய முறைகளை அறிமுகப்படுத்தக் கொழும்பு பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது” என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.