ஐனாதிபதி தேர்தலில் சமத்துவக் கட்சியானது ஐக்கிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் இன்று (02) சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி (Kilinochchi)) தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்
இது தொடர்பில் சமத்துவக் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில், தமிழ் மக்களினதும் இலங்கைத் தீவினதும் எதிர்கால நன்மைகளைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதென சமத்துவக் கட்சி தீர்மானித்துள்ளது.
எமது ஆதரவாளர்கள்
இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு முன் எமது மக்கள், எமது ஆதரவாளர்கள், எமது சூழலில் இயங்கும் பல்வேறு செயற்பாட்டு அமைப்புகள், ஆக்கபூர்வமான செயற்பாட்டாளர்கள் ஆகிய தரப்புகளோடு கலந்தாய்வுகளைச் செய்திருந்தது, அத்துடன், வரலாற்று அவதானிப்பு, சமகால நிலவரம், எதிர்காலப் பயணம் ஆகியவற்றைக்குறித்தும் ஆராய்ந்தது.
தமிழ்பேசும் மக்களுடைய எதிர்காலமும் இலங்கைத்தீவின் எதிர்காலமும் சமாந்தரமானவை என்பதுடன் ஒன்றிலிருந்து ஒன்று பிரித்துப்பார்க்க முடியாதவையாகவும் உள்ளன.
இரட்டை நெருக்கடி
இந்த அடிப்படையிலிருந்து நாம் விலகும்போதெல்லாம் தமிழ்பேசும் மக்களுக்கு இரட்டை நெருக்கடி ஏற்படுகிறது. இதுவே வரலாற்று அனுபவமாகும். ஆகவே எமது அரசியல் தீர்மானத்தையும் செயற்பாடுகளையும் அதற்கேற்ற விதத்தில் மேற்கொள்ள வேண்டியது மக்களுடைய பங்கேற்பை முழுமையாகக் கொண்ட அரசியற் கட்சி என்ற வகையில் சமத்துவக் கட்சியின் கடப்பாடாகிறது.
அத்துடன், தமிழ்,முஸ்லிம், மலையகத் தரப்பினருடன் அரசியற் கூட்டைக் கொண்டுள்ள ஒரே வேட்பாளரான சஜித் பிரேமதாசாவை ஆதரித்து நிற்பது தமிழ் பேசும் சமூகத்தினருக்கு ஒப்பீட்டளவிலான அரசியற் பலத்தையும் சுதந்திரத்தன்மையையும் அளிக்கும் என நம்புகிறோம்.
எமது இந்த நிலைப்பாட்டினை உணர்ந்து எமது மக்கள் தமது ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கு அளிக்க வேண்டும் எனச் சமத்துவக் கட்சி கோருகிறது.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச
இதன்போது கருத்து தெரிவித்த, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம், அபிவிருத்தி, மற்றும் பிரதேச பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
வட பிரதேசத்திற்காக தனியான ஜனாதிபதி செயலணி ஒன்றும் நிறுவப்படும். ஏனைய பிரதேசங்களுக்கும் மாகாண அடிப்படையில் செயலணிகள் அமைக்கப்படும்.
இந்த வேலை திட்டத்தின் ஊடாக யாழ் தேர்தல் மாவட்டத்தில், யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் கிளிநொச்சி (Kilinochchi) நிர்வாக மாவட்டங்களுக்கு இரண்டு உப செயலணிகளும் அமைக்கப்பட்டு, மாதாந்த வடக்கின் அபிவிருத்தி தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.