ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றுமொரு வேட்பாளரை விளம்பரப்படுத்துவது சட்டவிரோதமானது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் தனது சொந்த வெற்றிக்காக மட்டுமே ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள்
இந்த நிலையில், வேட்பாளர்கள் வேறொரு வேட்பாளருக்கு விளம்பரங்கள் செய்து வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், விளம்பரம் செய்யும் வேட்பாளர் மற்றும் விளம்பரப்படுத்தப்படும் வேட்பாளர் மீதும் தேர்தல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது நடவடிக்கை
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை விளம்பரப்படுத்தும் நோக்கில் பண விநியோகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவலை மூதூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிண்ணியா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனது வீட்டை சுற்றி வசிப்பவர்களுக்கு தலா 5000 ரூபா பணத்தை விநியோகித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.