அனைவரும் சங்குக்கு வாக்களித்து எமது சங்கை காப்பாற்றுவோம்!

தமிழர்களாகிய நாம் அனைவரும் சங்குக்கு வாக்களித்து எமது சங்கையை காப்பாற்றுவோம்.

இவ்வாறு திருக்கோவில் மண்டானைப் பிரதேசத்தில் இடம் பெற்ற பொது வேட்பாளருக்கான பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும், முன்னாள் தவிசாளருமான கலாநிதி கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

தமிழ் பொது வேட்பாளர் பாக்கிய செல்வம் அரியநேத்திரனுக்கு ஆதரவளிக்கும் இந்நிகழ்வு நேற்று மாலை மண்டானைப் பிரதேசத்தில் நடைபெற்றது.

அங்கு பொது வேட்பாளரின் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஜெயசிறில் கூறுகையில்

வேட்பாளரும் நீங்களே வாக்காளரும் நீங்களே. இது எமது இரத்தம்.

கடந்த எட்டு ஜனாதிபதிக்கு வாக்கு போட்டு தமிழர்கள் கண்ட பலன் என்ன?ஆறு முறை பிரதம மந்திரியாகவிருந்த ரணில் இதுவரைக்கும் தமிழருக்கென்று ஆற்றிய பணி என்ன? திருக்கோவில் பிரதேசத்தை முன்னேற்றுவோம் என்று கூறிப்பலர் வந்தார்கள் . ரணில் அழைத்தார் சென்றேன் என்றுகூறி தந்தையைக் கொன்றவனுடன் கைகோர்த்து நிற்கிற அவலக் காட்சிகளை காண்கிறோம். கோடிக்காக ரணில் சஜித் பின்னால் செல்லும் கூட்டத்தை இன்னும் தமிழர்கள் நம்பலாமா?
இன்று இங்குள்ள ஆஸ்பத்திரி கூட ஆறே ஆறு வைத்தியருடன் பிரதேச வைத்தியசாலை போன்று இயங்கி வருகிறது. இதுதானா இவர்களது அபிவிருத்தி?
இங்கு வெள்ளம் கொரோனா வந்தால் நாங்கள் வருவோம். ஆனால் இன்று வெள்ளை சிவப்பு வாகனங்களில் வருபவர்கள் எப்பொழுதாவது இங்கு வந்தார்களா?
தேர்தலுக்குப் பிறகு இவர்களை உங்களால் காண முடியுமா? இல்லை . ஆனால் அவர்கள் தருவதை வாங்கிக் கொள்ளுங்கள். உங்களது வாக்குகளை சங்குக்கு இடுங்கள். சங்கே முழங்கு. சங்கையை காப்பாற்றுவோம்.

மக்களும் கோசம் எழுப்பி ஆதரவளித்தனர்.