இலங்கையில் இறந்தும் இருவரை வாழ வைத்த யுவதி !

கேகாலை, கலிகமுவ பலபாகே பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 21 வயது யுவதியின் சிறுநீரகம் இருவரை வாழவைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூளைச்சாவு அடைந்த யுவதியின் சிறுநீரகம், இரண்டு நோயாளர்களுக்கு வெற்றிகரமாக உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டதாகவும், நோயாளிகள் நலமுடன் இருப்பதாகவும் கேகாலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் சந்தன விஜேசிங்க நேற்று (15) தெரிவித்தாதுள்ளார்.

மூளைச்சாவு அடைந்த சுபன்யா
கேகாலை, கலிகமுவ பலபாகே பிரதேசத்தை சேர்ந்த சுபன்யா வீரகோன் என்ற 21 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி காலை தலைவலி ஏற்பட்டதையடுத்து கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், சிகிற்சை பலனின்றி கடந்த 13ம் திகதி அவர் மூளைச்சாவு அடைந்தமை உறுதி செய்யப்பட்டது. அதுதொடர்பில் யுவதியின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களிடம் தெரிவித்ததையடுத்து, அவரது கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்களை தானமாக வழங்க பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நோயாளர்களுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை
இதற்கமைய, (14) திகதி இரண்டு நோயாளர்களுக்கு கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து உயிரிழந்த யுவதியின் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்பினோம். நேற்று (15) அந்த இரண்டு உறுப்புகளும் மாற்றப்பட்டு நலமாக இருப்பதாக அறிந்தோம்.

தன் மகள் இறந்துவிட்டாலும், அவளது உறுப்புகளுடன் வேறு யாரோ வாழ்கிறார்கள் என்று கேட்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, சுபன்யா வீரகோனின் இறுதிக் கிரியைகள் நேற்று (16) கலிகமுவவில் உள்ள பத்தபாவின் பொது மயானத்தில் நடைபெற்றுள்ளது.