கனடாவின் மக்கள்தொகை 41 மில்லியனைக் கடந்துவிட்ட நிலையில், அதற்குக் காரணம் புலம்பெயர்தல் என்று கூறி, அதைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில், கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர், கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையை 35 சதவிகிதம் குறைப்பதாக, அதாவது, 364,000 சர்வதேச மாணவ மாணவியருக்கு மட்டுமே கல்வி அனுமதி வழங்க இருப்பதாக தெரிவித்தார்.
2025இலோ, மேலும் 10 சதவிகித அனுமதிகளைக் குறைத்து, 327,000 சர்வதேச மாணவர்களுக்கு மட்டுமே கல்வி அனுமதி வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார் இப்படி கனடா தொடர்ந்து சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை அதிகரித்துவருவதால், மாணவர்களின் பார்வை வேறு நாடுகள் பக்கம் திரும்பிவருகிறது.
கனடாவின் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான ரொரன்றோ பல்கலைக்கழகம், கல்வி கற்பதற்காக விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 40 சதவிகிதம் குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
ரொரன்றோ பல்கலையின் சர்வதேச விவகாரங்கள் பிரிவு துணைத்தலைவரான Joseph Wong, இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி என்னும் விடயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்கிறார்.
கனடாவில் கல்வி கற்பது தொடர்பில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள தெளிவின்மை மற்றும் நிலையற்ற தன்மை, அவர்களுக்கு கனடாவில் கல்வி கற்பதன் மீதான ஆர்வத்தைக் குறைத்துள்ளதாகவும், அதன் விளைவாக, குறிப்பாக, கனடாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.