சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஐக்கிய மக்கள் சக்தி(SJB) மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஆகியவை ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம், தேசிய மக்கள் சக்தி எவ்வாறு அரசாங்கத்தை அமைக்கும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சாகர காரியவசம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிப்பீர்களா என பொது ஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்திடம்(sagara kariyawasam) கொழும்பு ஊடகமொன்று வினவியபோது,
அவர் அவ்வாறு செய்ய மாட்டோம் என்று உறுதியாகக் கூறினார். “அவர்களை ஆதரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஒரு கட்சியாக, நாங்கள் ஒரு தனித்துவமான கொள்கைகளை கடைப்பிடிக்கிறோம்.ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரண்டும் எங்களுடைய கொள்கைகளிலிருந்து வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டுள்ளன. வேறு சிலரைப் போலல்லாமல், அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக மட்டுமே அவர்களைஆதரிக்க நாங்கள் தயாராக இல்லை என்றார்.
தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சருமான மகிந்த அமரவீரவிடம்(mahinda amaraweea), தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவது பற்றி அவர்கள் பரிசீலிப்பார்களா கேட்டபோது,
நாங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆதரிப்போம் என்று நம்பவில்லை.”என்றார்.
திஸ்ஸ அத்தநாயக்க
இதே கேள்விக்கு பதிலளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க(tissa attanayake),
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க திட்டமிடவில்லை அல்லது தேசிய மக்கள் சக்தி எந்த நோக்கத்தையும் தெரிவிக்கவில்லை என்பதால், கூட்டணி அரசாங்கத்தைப் பற்றி விவாதிப்பதில் அர்த்தமில்லை என்று கூறினார்.
“ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவுக்கு கிடைத்த ஆணைகள் வேறுபட்டவை. திஸாநாயக்கவுடன் முன்னோக்கிச் செல்ல நாங்கள் தயாரா என்று யாராவது எங்களிடம் கேட்டால், அவ்வாறான தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி அத்தகைய திட்டம் எதையும் குறிப்பிடவில்லை. எனவே, அதைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை” என்றார்.