தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய ஜனாதிபதி முன்வரவேண்டும் என தமிழ் பொதுக் கட்டமைப்பின் கீழ் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் பாக்கியச்செவ்லம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை, இன்று (23) மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் மீண்டும் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தும் நிலைமையினை ஏற்படுத்தாமல் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனும் இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ் பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்த த.வசந்தராஜா, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், மா.நடராசா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து ஆகியோரும் கருத்துத் தெரிவித்ததுடன் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் ந.நகுலேஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.