சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், நேற்றைய தினம் டுபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தின் வால் முனையில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரவு 9.40 மணியளவில் விமானம் புறப்படுவதற்கு முன் தரை ஊழியர்களால் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலமையை சரிசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்து புகை வெளியேறியமைக்கான உண்மையான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

எனினும், எரிபொருள் தொட்டியில் உள்ள அதிகப்படியான எரிபொருளால் உருவாகும் வெப்பமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

விமானத்தில் பயணிக்க திட்டமிடப்பட்ட மொத்தம் 320 பயணிகள் விமான நிலையத்தின் காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து தேவையான அனைத்து சோதனைகளுக்கும் பின்னர், 280 பயணிகளுடன் விமானம் தாமதமாகப் புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.