யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் வணிகவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சிவபாலன் அச்சுதன் வணிகவியலில் பேராசிரியராகவும், பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகதாஸ் தணிகைச்செல்வன் இலத்திரனியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் வணிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும், விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியது.
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (28) துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் வணிகவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சிவபாலன் அச்சுதன் மற்றும் விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகதாஸ் தணிகைச்செல்வன் ஆகியாரின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் என்பன இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இருவரும் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.