இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சட்டவிரோதமாக சீனாவுக்கு தாமிரக் கம்பிகள் ஏற்றுமதி செய்யப்பட்டவிருந்த முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
மத்திய புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, கொள்கலன் ஒன்றில், இறப்பர் ஏற்றுமதி என்ற போர்வையில் ஏற்றுமதி செய்யப்பட்ட தாமிரக் கம்பிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில், குறித்த கொள்கலனில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக 12 ஆயிரம் கிலோ கிராம் துண்டாக்கப்பட்ட இறப்பர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த கொள்கலனை பரிசோதித்த போது அதில் 8440 கிலோகிராம் தாமிர கம்பிகளும் கலந்து இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பீடு 25 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது உள்ளூர் தொழிலதிபர்களுக்கு தாமிர கழிவுகள் தேவை என்பதால் தற்காலிகமாக தாமிர ஏற்றுமதியை அரசாங்கம் தடைசெய்துள்ளது.
அதை ஏற்றுமதி செய்ய வேண்டுமானால், இறக்குமதி கட்டுப்பாட்டு துறையின் ஏற்றுமதி உரிமம் தேவை என்பதோடு, சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்தால், 5 கோடியே 7 மில்லியன் ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.