விசா மோசடி தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

இலங்கையில் விசா மோசடி தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய கணக்காய்வு அலுவலகம் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக விசா வழங்குவது தொடர்பில் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.

புதிய நாடாளுமன்றம் கூடும் காலத்திற்கு முன்னதாக இந்த கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, ஈ-கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்தல் குறித்த நடைமுறைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு அந்த அறிக்கையும் வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விசா விண்ணப்பங்களை கையாள்வதற்கு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டமை தொடர்பில் அதற்காக செய்யப்பட்ட செலவுகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

பாரிய நிதி மோசடி
இலங்கையில் வருகைதரும் விசாக்கள் வழங்கும் நடவடிக்கை குறிப்பாக விசா விண்ணப்பங்களை கையாளும் பொறுப்பு வீ.எப்.எஸ் குளோபல் என்ற நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறு முக்கிய பொறுப்பு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் வழங்கிய காரணத்தினால் பாரிய நிதி மோசடி இடம் பெற்றதாகவும் பயணிகளின் தனிப்பட்ட தரவுகளின் இரகசிய தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும் பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்தி இருந்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், ரவூப் ஹக்கீம் மற்றும் சாம்பிக்க ரன்னவக்க ஆகியோர் இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றையும் தாக்கல் செய்திருந்தனர்.

இவ்வாறான ஒரு பின்னணியில் குறித்த விசா வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டு தற்பொழுது புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பினை ஏற்றதன் பின்னர், முன்னதாக விசா வழங்கும் நடைமுறையை மொபிடெல் நிறுவனத்திடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.