தெலங்கானா மாநிலத்தின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பெண் அமைச்சரான கொண்டா சுரேகா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா ஆகியோரது பிரிவுக்கு முன்னாள் டிஆர்எஸ் கட்சி அமைச்சர் கேடி ராமராவ் தான் காரணம் என்று பேசியிருந்தார்.
அந்த சர்ச்சை பேச்சை அடுத்து தெலுங்குத் திரையுலகமே திரண்டு வந்து அமைச்சர் சுரேகாவுக்கு அவர்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்தது. இந்நிலையில் சுரேகா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.
இருந்தாலும் நடிகர் நாகார்ஜூனா, அமைச்சர் சுரேகா மீது கிரிமினல் அவதூறு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அடுத்தாக 100 கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளதாக நாகார்ஜூனா தெரிவித்துள்ளார்.
“தன்னுடைய பேச்சை அமைச்சர் திரும்பப் பெற்றுள்ளார். அதோடு சமந்தாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், எங்கள் குடும்பத்தினரிடம் அவர் எந்தவிதமான மன்னிப்பையும் கேட்கவில்லை. அவர் எங்களிடம் மன்னிப்பு கேட்டாலும் வழக்கை வாபஸ் பெற மாட்டோம். இது தனிப்பட்ட விவகாரம் அல்ல. அவரது பேச்சு என்னைப் பற்றியும், எங்களது குடும்பத்தைப் பற்றியும் அதிகமாகச் சென்று விட்டது. அரசியல் லாபத்திற்காக எங்களது பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது. பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு மற்ற அரசியல்வாதிகளுக்கும் எச்சரிக்கையாக அமையும் என நம்புகிறேன்” என சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.