1968ம் ஆண்டு பிப்.7ம் தேதி விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்., 12 ரக இரட்டை எஞ்சின் விமானம், ராணுவ வீரர்கள் 102 பேரை ஏற்றிக்கொண்டு சண்டிகரில் இருந்து காஷ்மீர் மாநிலம் லே பகுதிக்கு சென்றது. ஹிமாச்சல் பிரதேசம், இமயமலை பகுதியில் உள்ள ரோஹ்தாங் கணவாய் பகுதியில் விமானம் சென்ற போது திடீரென விழுந்து நொறுங்கியது. யாரும் உயிர் பிழைக்கவில்லை. பனிக்கட்டி படர்ந்த அந்த பகுதியில், 102 பேரின் சடலங்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ஆனால் எந்த பயனும் இல்லை.
2003ம் ஆண்டு மலையேறும் நிபுணர்கள் விமானத்தின் இடிபாடுகளை கண்டுபிடித்தனர். அதை தொடர்ந்து சடலங்களை தேடும் பணி விமானப்படை மற்றும் ராணுவம் சார்பில் முடுக்கி விடப்பட்டது. 2019ல் அந்த பகுதியில் இருந்து 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. தற்போது ராணுவ வீரர்கள் மற்றும் திரங்கா மலை மீட்பு பணியாளர்கள் குழுவினர், மேலும் 4 வீரர்களின் சடலங்களை மீட்டுள்ளனர். இதில் கேரளாவைச் சேர்ந்த செரியன் என்ற வீரரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.
விமானம், விழுந்து நொறுங்கியபோது, பத்தனம்திட்டாவின் எலந்தூரைச் சேர்ந்த செரியனுக்கு வயது 22. இந்திய ராணுவம் இந்த விஷயத்தை ஆரன்முலா காவல்துறையிடம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. பின்னர் அவர்கள் செரியனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தேவையான சம்பிரதாயங்கள் முடிந்ததைத் தொடர்ந்து, அஸ்தி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். மேலும் அவரது நினைவைப் போற்றும் வகையில் இறுதிச் சடங்கு நடத்தப்படும்.
‘மீட்பு பணி குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது’ என்று ஒரு மீட்பு படை அதிகாரி கூறினார். அதிகாரப்பூர்வ பதிவுகளில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களின் உதவியுடன், மேலும் ஒரு ராணுவ வீரர் மல்கான் சிங்கின் உடல் அடையாளம் காணப்பட்டது. மற்ற சடலங்கள் யாருடையது என உறுதியாக அடையாளம் காணவில்லை.