ஆரகன் படம் திரை விமர்சனம்!

திரில்லர் படங்கள் என்றாலே பேய்க் கதை, சைக்கோ கதை ஆகியவைதான் பெரும்பாலான படங்களில் இருக்கும். இந்தப் படத்தில் ஒரு சரித்திரத்தின் தொடர்ச்சியாய் வரும் ஒரு கதாபாத்திரத்தை வைத்து கதையமைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இளந்திரையன் என்ற அரசரின் வாரிசு, ஒரு முனிவரை ஆபத்தில் இருந்து காப்பாற்றியதற்காக என்றும் இளமையுடன் இருக்கும் ஒரு வரத்தைப் பெறுகிறார். அதன் பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய காலகட்டத்தில் வேறு ஒரு கதை ஆரம்பமாகிறது.

மைக்கேல் தங்கதுரை, கவிப்ரியா இருவரும் காதலர்கள். மலைப்பிரதேசம் ஒன்றில் தனிமையில் வசிக்கும் உடல்நிலை சரியில்லாத ஸ்ரீரஞ்சனியைப் பார்த்துக் கொள்ள ஆறு மாத ஒப்பந்தத்தில் வேலைக்குப் போகிறார் கவிப்ரியா. அந்த இடம் மொபைல் சிக்னல் சரியாகக் கிடைக்காத ஒரு பகுதி. இருந்தாலும் அவ்வப்போது தனது காதலன் மைக்கேலுடன் பேசிக் கொண்டிருக்கிறார் கவிப்ரியா. இந்நிலையில் கவிப்ரியா காதலனுடனான முந்தைய பழக்கத்தில் தாய்மை அடைகிறார். ஒரு கட்டத்தில் அங்கு இருப்பது அவரை வாட்டுகிறது. காதலன் மைக்கேலிடம் தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு கேட்கிறார். ஆனால், அதன்பின் எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கிறது. அவை என்ன, கவிப்ரியா அந்த இடத்தை விட்டுப் போனாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

மனரீதியாக வலிமை இல்லாதவர்களை எளிதில் அடக்கி ஆளலாம் என்பதுதான் இந்தப் படத்தின் உளவியல் ரீதியான ஒரு வரிக் கதை. அதை சரித்திரக் கதையில் ஆரம்பித்து ஒரு முன்னோட்டக் கதையைக் கொடுத்து அப்படியே இந்தக் காலத்து கதைக்கு வந்திருக்கிறார் இயக்குனர். ஆனாலும், படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் எளிதில் புரியும்படி சொல்லியிருந்தால் முழுமையாகப் பாராட்டி இருக்கலாம்.

மனரீதியாக வலிமை இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் கவிப்ரியா. சினிமாத்தனமில்லாத ஒரு முகம், அதுவே அவரது கதாபாத்திரத்திற்கு பிளஸ் பாயின்ட்டாக அமைந்துள்ளது. நமது பக்கத்து வீட்டுப் பெண் போன்ற எளிமையான தோற்றம். கதாபாத்திரம்தான் வலிமை இல்லாத ஒன்றே தவிர அதில் கவிப்ரியாவின் நடிப்பு வலிமையாக அமைந்துள்ளது. அவருக்கு ஏதோ நடக்கப் போகிறது என்ற பதைபதைப்பை நமக்கும் ஏற்படுத்தும்படி நடித்திருக்கிறார்.

மனரீதியாக வலிமையான கதாபாத்திரத்தில் மைக்கேல் தங்கதுரை. “வீக்கா இருக்கிறவங்கள ஈஸியா கண்ட்ரோல் பண்ணலாம். அவங்களும் நம்மள முழுசா நம்புவாங்க. அவங்க மனசுக்குள்ள நாம இருக்கிற வரைக்கும் நம்ம கண்ட்ரோல்ல தான் இருப்பாங்க,” இந்த வசனங்கள்தான் மைக்கேல் தங்கதுரை கதாபாத்திரத்தின் வடிவமைப்பு. அப்படி அவர் எதையெல்லாம் கன்ட்ரோலில் வைத்திருக்கிறார் என்பது ஆச்சரியம் மட்டுமல்ல அதிர்ச்சியானதும் கூட.

தனிமையான வீட்டில் வசிக்கும் நடுத்தர வயதுப் பெண்ணாக ஸ்ரீரஞ்சனி. இவரது கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பதை அவ்வளவு புரிந்து கொள்ள முடியாது. கிளைமாக்ஸ் வரை காத்திருக்க வேண்டும். கற்பனைக்கெட்டாத ஒரு கதாபாத்திரத்தில் கவனமாகவே நடித்திருக்கிறார் ஸ்ரீரஞ்சனி.

படத்தின் ஆரம்ப சில காட்சிகள் சென்னையில் நடக்கிறது. அதன்பின் மலைப்பிரதேசம், தனிமையான காட்டு வீடு என ஒரு பயமுறுத்தும் பின்னணியுடன் படம் நகர்கிறது.

திரில்லர் படங்களுக்கு உரிய ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சூர்யா வைத்தி. விவேக், ஜெஸ்வந்த் இருவரும் இசை அமைத்திருக்கிறார்கள். பின்னணி இசை என்பது காட்சிக்குக் காட்சி அதிர வைப்பது என்று அவர்களது மனதில் இயக்குனர் சொல்லி வைத்திருக்கிறார் போலும். வசனங்களைக் கூட கேட்க முடியாத அளவிற்கு காது கிழியும் அளவிற்குத் தந்திருக்கிறார்கள்.

கதையாக யோசிப்பது சிறப்பாக இருந்தாலும் அதைத் திரைக்கதை அமைத்து படமாகக் கொடுப்பது சாதாரண விஷயமல்ல என்பது இயக்குனருக்கு இனிமேல் புரிய வரும். படம் பார்க்க வருபவர்கள் எளியவர்களோ, வலியவர்களோ, படம் அவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதை இயக்குனர் உணர்ந்தாக வேண்டும். அடுத்த படங்களில் சரி செய்வார் என்று நம்புவோம்.