வேட்டையன் திரை விமர்சனம்!

தயாரிப்பு – லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – தசெ ஞானவேல்
இசை – அனிருத்
நடிப்பு – ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பஹத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா
வெளியான தேதி – 10 அக்டோபர் 2024
நேரம் – 2 மணி நேரம் 43 நிமிடம்
ரேட்டிங் – 3.25/5

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை. ‘என்கவுன்டர், கார்ப்பரேட் மோசடி, மனித உரிமை, மனிதாபிமானம்’ என கலந்து ஒரு கமர்ஷியல் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தசெ ஞானவேல். தனது முந்தைய படமான ‘ஜெய் பீம்’ படத்தில் காவல் துறை விசாரணை என்பது ஒரு அப்பாவியின் உயிரை எப்படி எடுக்கும் என்பதைக் காட்டியவர் இந்தப் படத்தில் ‘போலி என்கவுன்டர்’ என்பது எப்படி ஒரு அப்பாவியின் உயிரை பறிக்கும் என்பதைக் காட்டியிருக்கிறார்.

இந்திய அளவில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்பட்டவர் ரஜினிகாந்த். கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆக இருக்கிறார். பள்ளியில் வைத்து கஞ்சா கடத்தல் செய்தவனை அரசுப்பள்ளி ஆசிரியை துஷாரா விஜயன் புகாரில் என்கவுன்டர் செய்கிறார். அதன்பின் சென்னை மாற்றலாகி வரும் துஷாரா, இளைஞன் ஒருவரால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்படுகிறார். குற்றவாளி யார் என்பதை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படும் கிஷோர் கண்டுபிடிக்கத் தடுமாற, அவருக்குப் பதிலாக வரும் ரஜினிகாந்த், இரண்டே நாளில் அந்த குற்றவாளியை என்கவுன்டர் செய்கிறார். ஆனால், உண்மைக் குற்றவாளி அந்த இளைஞன் அல்ல என மனித உரிமை ஆணைய நீதிபதி அமிதாப்பச்சன், ரஜினியிடம் தெரிவிக்கிறார். தவறு செய்துவிட்ட குற்ற உணர்வில் உண்மைக் குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க ரஜினிகாந்த் முயல்கிறார். அவர் கண்டுபிடித்தாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அவசரமான நீதி தேவையில்லை, விரிவான நீதிதான் தேவை என்பதை உணர்த்தும் முழுக்க முழுக்க ‘பொருளடக்கம்’ சார்ந்த ஒரு படம். அதைத் தெளிவாகவும், அழுத்தமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ரஜினி ரசிகர்களைத் திருப்திப்படுத்த சில காட்சிகளில் மட்டும் ஹீரோயிசத்தை வைத்துவிட்டு மற்ற காட்சிகளில் அவரை எஸ்.பி. அதியன் ஆக மட்டுமே பார்க்க வைத்திருக்கிறார்.

இப்படியான கதாபாத்திரங்கள் ரஜினிகாந்த்துக்குப் புதியதல்ல. முந்தைய ‘ஜெயிலர்’ படத்தில் ஓய்வு பெற்ற சிறை அதிகாரியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் பணியில் இருக்கும் எஸ்.பி. ஆக நடித்திருக்கிறார். இரண்டு படங்களிலும் தோற்றம் ஒன்றுதான், ஆனாலும் நடிப்பில் மாற்றம் இருக்கிறது. என்கவுன்டைரை எப்போதும் நியாயப்படுத்திப் பேசும் ஒரு கதாபாத்திரம். தன்னால் ஒரு அப்பாவி உயிர் பறி போய்விட்டதே என்ற கவலையுடன் அதைச் சரி செய்ய நினைக்கிறார். அதற்குரிய தண்டனையையும் ஏற்றுக் கொள்ளத் தயாராகவும் இருக்கிறார். அதற்கு முன்பாக அந்த அப்பாவி ஒரு நிரபராதி என நிரூபிக்கப் போராடுகிறார். இன்னும் கொஞ்சம் ஹீரோயிசத்தை வைத்திருக்கலாமே என்று ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கலாம்.

ரஜினிக்குப் பிறகு படத்தில் அதிகம் கவர்பவர் பஹத் பாசில். திருடனாக இருந்து திருந்தி, ரஜினிக்கு உதவும் சுவாரசியமான ஒரு ‘டெக்கி’ கதாபாத்திரம். அவ்வப்போது சில பல கமெண்ட்களை சொல்லி சிரிக்க வைக்கிறார். மனித உரிமை கமிஷனின் நீதிபதியாக அமிதாப்பச்சன். தமிழை உச்சரிக்கக் கொஞ்சம் சிரமப்பட்டுள்ளார் என்பது ‘லிப் சின்க்’ல் தெரிகிறது. இருந்தாலும் அவருக்காகவே எழுதப்பட்ட ஒரு கதாபாத்திரமாகத் தெரிகிறது.

ஏழைப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக பாடுபடும் ஆசிரியை கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன். அவருடைய எதிர்பாராத மரணம்தான் படத்தின் மையக் கரு. கொஞ்ச நேரமே வந்தாலும் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார். ரஜினியின் மனைவியாக மஞ்சு வாரியர். ‘மனசிலாயோ’ பாடல், மற்றும் சில காட்சிகளுடன் வந்து போகிறார். ரஜினியின் விசாரணைக் குழுவின் போலீஸ் அதிகாரியாக ரித்திகா சிங். துடிப்பான ஒரு கதாபாத்திரம். படத்தின் வில்லன் யார் என்பதின் சஸ்பென்ஸ் இடைவேளை வரை நீடிக்கிறது. மாணவர்களின் கல்வியில் கோடிகளை சம்பாதிக்க நினைக்கும் கார்ப்பரேட் முதலாளியாக ராணா டகுபதி.

ஆரம்பத்தில் வரும் ‘மனசிலாயோ’ பாடலில் மட்டும் அனிருத்துக்குக் கொஞ்சம் வேலை. அதன்பின் வரும் காட்சிகளில் அவருடைய இசை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. காட்சிகள் அதிரடியாக இல்லாமல் உணர்வுபூர்வமாக இருந்ததால் இசையை ‘பிளாட்’ ஆகக் கொடுத்துவிட்டார். ‘ஜெயிலர்’ படத்தில் அதிரடி காட்டியிருந்தார், இதில் கொஞ்சம் ஏமாற்றமே. ஒளிப்பதிவாளர் கதிர், படத்தின் ‘கன்டென்ட்’டுக்குள் தன்னுடைய ‘காமரா’வை அடக்கியுள்ளார்.

சில காட்சிகளில் ‘காம்ப்ரமைஸ்’ செய்து கொண்டுள்ளார் இயக்குனர். குறிப்பாக பஹத் பாசில் கதாபாத்திரம் நினைத்தபடி எல்லா இடத்திலும் செல்வதும், அவரை யாருக்குமே தெரியாதவர் போல காட்டுவது சினிமாத்தனமாக உள்ளது. இடைவேளைக்குப் பிறகான வில்லனை நோக்கிய விசாரணைத் தேடல் விறுவிறுப்பு குறைவாகத் தெரிகிறது. படத்தில் ஒரு வேகம் இல்லாமல் மெதுவாக நகர்வதையும் தவிர்த்திருக்கலாம்.