இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோயின் படம்

ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோக்களின் படங்கள் ரசிகர்களுக்கு போர் அடித்த நிலையில் சூப்பர் ஹீரோயின்களை களம் இறக்கியது. அதேபோல இந்தியாவில் கிரிஷ், ஹீரோ, மின்னல் முரளி, ஹனுமன் மாதிரியான சூப்பர் ஹீரோக்கள் படங்கள் வெளிவந்தன. இந்த நிலையில் முதன்முறையாக ‘மஹா காளி’ என்ற பெயரில் சூப்பர் ஹீரோயின் படம் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தை ஆர்கேடி ஸ்டூடியோ சார்பில் ரிஸ்வான் ரமேஷ் துக்கல், ஆர்கே துக்கல் ஆகியோர் தயாரிக்கிறார்கள். பிரசாந்த் வர்மா கதை எழுத, பூஜா அபர்ணா கொல்லுரு இயக்குகிறார். ஸ்மரன் சாய் இசை அமைக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் பூஜா அபர்ணா கூறியதாவது : ஆன்மிகம் மற்றும் புராணங்களை சமகால சிக்கல்களுடன் கலந்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இருந்து வரும் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம். காளி தேவியை அதிகமாக வழிபடும் மேற்கு வங்க மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கதை களத்தில் அந்நிலத்தின் சாரத்தையும் அதன் ஆழமான வேரூன்றிய மரபுகளையும், அதிர்ச்சியூட்டும் காட்சியமைப்புகள் மற்றும் உணர்வுப்பூர்வமாக ஈர்க்கும் கதையுடன் படம் பிடிக்கும்.

இந்தியப் பெண்களின் பன்முகத்தன்மை மற்றும் அவர்களின் அடங்காத மனப்பான்மை ஆகியவற்றைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திரைப்படம், ஒருவரின் அடையாளத்தை முழுமையாகத் தழுவுவதில் உள்ள வலிமையை எடுத்துக்காட்டுகிறது. இப்படத்தில் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு இணைந்து பணியாற்றுகிறார்கள். இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்பத்திலும் தயாராகிறது.