தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு வந்த சோதனை

விழுப்புரத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக நடிகர் விஜயின் தவெக மாநாட்டுத் திடல் சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது.

தவெக மாநாடு
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. அடுத்து வரும் 5 தினங்களுக்குத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விழுப்புரம் – 25 மி.மீ, வளவனூர், அவலூர்பேட்டை ,கோலியனூர், சூரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சராசரியாக 4.88 மி.மீ. மழையும் பதிவாகியது.

இந்த நிலையில் வருகின்ற 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடிகர் விஜயின் தவெக கட்சியில் முதல் மாநாடு நடைபெற உள்ளது . இதற்கான பணிகள் நடைபெற்று வந்தது .

கனமழை

இந்த சூழலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாநாட்டுத் திடல் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் மாநாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாது விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வரும் 27-ஆம் தேதிக்குள் தமிழக வெற்றி கழக கட்சியின் மாநாட்டுக்கான பணிகளை முழுமையாக முடிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.