அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 16 மாவட்டங்களில் இன்று (அக்.,18) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வட கிழக்கு பருவ காற்று காரணமாக, வங்கக் கடலில் அடுத்தடுத்த நிகழ்வுகள் உருவாவதற்கான சூழல் நிலவுகிறது. இது, கடலோர மாவட்டங்களுக்கு மழை கொடுக்க வாய்ப்புள்ளது. வடக்கு அந்தமான் கடல் பகுதியில், வரும் 20ல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால், மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வரும் 22ல் உருவாக வாய்ப்புள்ளது.
இது வலுவடைந்து, வட மேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து மேற்கு திசையை நோக்கி நகரும். மேற்கு,வடமேற்கு திசையில் நகரும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இந்திய பகுதியை விட்டு விலகிச் செல்லும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 16 மாவட்டங்களில் இன்று(அக்.,18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் நாளை (அக்.,19) ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை ஆகிய 14 மாவட்டங்களில் அக்.,20ம் தேதி கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை (அக்.,19) முதல் அக்.,24ம் தேதி வரை 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.