நாடு முழுவதும் குழந்தை திருமணங்களைத் தடுக்க கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்தியாவை பொறுத்தவரை பெண்களின் திருமண வயது 18 என்றும், ஆண்களின் திருமண வயது 21 என்றும் உள்ளது. இந்த வயதிற்கு கீழ் ஆணோ, பெண்ணோ திருமணம் செய்து கொண்டால், அது குழந்தை திருமணமாகவும், சட்டப்படி குற்றமாகவும் கருதப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன என தரவுகள் தகவல் தெரிவிக்கிறது.
இந்நிலையில், குழந்தை திருமணத்தை தடுக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, ஜே.பி.பார்த்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று(அக்.,18) விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
* குழந்தை திருமணங்களை தண்டனை அடிப்படையில் தடுக்க முயல்வது பயனற்றது.
* குழந்தை திருமண விவகாரத்தில் குற்றவாளிக்கு தண்டனை வழங்குவது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும்.
* சிறுவர்களின் பாதுகாப்பில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
* நாடு முழுவதும் குழந்தை திருமணத்தை தடுக்க அனைத்து அரசு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
* நாடு முழுவதும் குழந்தை திருமணங்களைத் தடுக்க கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
* நாடு முழுவதும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தை செயல்படுத்த புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.