ராக்கெட் டிரைவர் திரை விமர்சனம்

வழக்கமான கற்பனைகளை மீறிய அதீத கற்பனையுடன் கூடிய கதைகள் ஆச்சரியப்பட வைக்கும். அப்படியான ஒரு அதீத கற்பனைக் கதைதான் இந்தப் படம். கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு ‘காலப் பயணம்’ செய்து வந்த, அதுதான் ‘டைம் டிராவல்’, மரியாதைக்குரிய ஒரு பிரபலத்தைப் பற்றிய கதை.

இயக்குனர் ஸ்ரீராம் அனந்தஷங்கர் தனது கதையை மட்டுமே நம்பி இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் சுவாரசியமான திரைக்கதையையும் யோசித்திருந்தால் இந்த ராக்கெட் டிரைவர் இன்னும் சிறப்பாகப் பறந்திருப்பார்.

அறிவியல் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டவர் விஷ்வத். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக ஆட்டோ ஓட்டுகிறார். ஒருநாள் அவரது ஆட்டோவில் இளம் வயது அப்துல் கலாம் (நாகா விஷால்) வழி கேட்டு உதவி கேட்கிறார். ஆட்டோ பயணத்தில் 1984லிருந்து அப்துல் கலாம் 2023க்குள் ‘டைம் டிராவல்’ ஆகி வந்திருப்பது தெரிய வருகிறது. எதற்காக 75 வருடங்களுக்குப் பிறகு வர வேண்டும். அதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என ஆட்டோ ஓட்டுநரும், அப்துல் கலாமும் ஒரு புரிதலுக்கு வருகிறார்கள். பின்னர் இருவரும் அதற்கான காரணத்தைத் தேடி ராமேஸ்வரம் போகிறார்கள். கலாமின் காலப் பயணத்திற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டார்களா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஒருவரை இப்படி டைம் டிராவல் செய்ய வைத்து ஒரு கதையை எழுதிய விதத்தில் இயக்குனரைப் பாராட்ட வேண்டும். படத்தின் ஆரம்ப சில காட்சிகளை இலக்கில்லாமல் நகர்த்தியிருக்கிறார். அதன்பின் அப்துல் கலாம் வந்த பிறகு கொஞ்சம் சுவாரசியம் ஆக இருக்கிறது. கிளைமாக்ஸ் முன்பாக அது இருந்தாலும் படம் முழுவதும் இல்லாமல் அவ்வப்போது மட்டும் வந்து போவதுதான் குறையாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் முயற்சித்திருந்தால் ஒரு மாறுபட்ட படமாக வந்திருக்க வேண்டிய ஒரு படம்.

இயற்பியலில் அதிக ஆர்வம் கொண்ட படிப்பாளி விஷ்வத். ஆனால், தன்னால் அதைத் தொடர முடியவில்லை என்ற வருத்தத்தில் அதைச் செய்ய விடாமல் தடுத்த அப்பா மீது கோபத்தில் இருப்பவர். அப்படிப்பட்டவருக்கு இளம் வயது அப்துல் கலாம் வந்து வாழ்க்கையின் அர்த்தத்தை உணர வைக்கிறார். ஆட்டோ டிரைவராகவும், அறிவியல் ஆர்வலராகவும் இயல்பாகவே நடித்திருக்கிறார் விஷ்வத்.

படத்தின் முக்கியமான கதாபாத்திரமான இளவயது அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நாகா விஷால். 2019ல் வெளிவந்த ‘கே.டி என்கிறது கருப்புதுரை’ படத்தில் சிறுவன் குட்டி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வென்றவர். இந்தப் படத்தில் பள்ளிப் படிப்பை முடித்த இளம் வயது அப்துல் கலாம் ஆக நடித்திருக்கிறார். அந்தக் காலத்தில் இளம் வயதில் அப்துல் கலாம் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்று தன் நடிப்பால் எண்ண வைக்கிறார் நாகா விஷால்.

சிறு வயதிலிருந்தே அப்துல் கலாமின் நண்பனாக இருந்தவர் சாஸ்திரி. இந்தக் காலத்தில் தாத்தாவாக இருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தில் காத்தாடி ராமமூர்த்தி நடித்திருக்கிறார். நாகாவும், ராமமூர்த்தியும் ஒருவரை மற்றவர் வாடா போடா என அழைத்து பேசிக் கொள்வது சுவாரசியமாக உள்ளது. சுனைனா கதாபாத்திரம் படத்தில் எதற்கென்றே தெரியவில்லை. டிராபிக் கான்ஸ்டபிளாக சில காட்சிகளில் வந்து போகிறார். ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே.

ஒரு பயணக் கதையில் கதாபாத்திரங்களின் ஊடே சேர்ந்து தானும் பயணத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தெஜிமெல் சூர்யா தாமஸ். கிடைக்கும் காட்சிகளில் தன் இருப்பைப் பதிவு செய்கிறார் இசையமைப்பாளர் கவுஷிக் கிரிஷ்.

சிறிய பட்ஜெட் படங்கள் என்றால் வழக்கம் போல உட்காரவே முடியாதபடிதான் பல படங்கள் இருக்கும். ஆனால், இந்தப் படம் மாறுபட்ட ஒரு கதையில் ஒரு புதிய தோற்றத்தைத் தருகிறது. அதை இன்னும் சிறப்பாகக் கொடுக்க இடம் இருந்தும் ராக்கெட்டில் சரியான எரிபொருளை நிரப்பாமல் விட்டுவிட்டார்கள்.