தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளார்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ.,வும் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பை ஆதரித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக அறிக்கை, சமூக வலைதள பதிவுகளை வெளியிட்ட எலான் மஸ்க், பொதுக்கூட்டத்திலும் டிரம்ப் உடன் இணைந்து பங்கேற்றார்.

டிரம்ப்பிற்கும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீசுக்கும் இடையே போட்டி கடுமையாக உள்ளது. இதனையடுத்து, டிரம்ப் பிரசார குழுவிற்கு உதவும் வகையில், அரசியல் நடவடிக்கை அமைப்பு(பிஏசி) ஒன்றை ஆன்லைன் வாயிலாக எலான் மஸ்க் துவக்கி உள்ளார். இதன் மூலம் போட்டி கடுமையாக இருக்கும் மாநிலங்களில் வாக்காளர்களை ஒருங்கிணைப்பதும், பதிவு செய்வதும் ஓட்டளிக்க வைப்பதும் இதன் முக்கிய பணியாகும். ஒன்று சேர்த்து அவர்களின் ஆதரவை பெறுவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டிரம்ப்பிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, அமெரிக்க அரசியல் சாசனத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் ஒன்றை எலான் மஸ்க் துவக்கி உள்ளார். இதற்கு ஆதரவு அளிப்பவர்களில் ஒருவருக்கு தினமும் ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்து உள்ளார். இதோடு நிற்காமல், முதல்நபராக பென்சில்வேனியாவை சேர்ந்த ஜான் டிரெஹர் என்பவருக்கு அந்த பரிசை வழங்கி உள்ளார்.