இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 8 விக்., வித்தியாசத்தில் நியூசி., வெற்றி

பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 46/10, நியூசிலாந்து 402/10 ரன் எடுத்தன. 2வது இன்னிங்சில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. சர்பராஸ் கான் 150, ரிஷப் பன்ட் 99 ரன்கள், கோலி 70, ரோகித் சர்மா 52 ரன்களுடன் 462 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனையடுத்து நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2வது இன்னிங்சில் நான்கு பந்துகள் வீசப்பட்ட நிலையில் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இன்று (அக்.,20) 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் துவங்கிய 2வது பந்தில் டாம் லதாம், பும்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ‛டக்’ அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் கான்வே-ம் (17) பும்ரா வேகத்தில் வீழ்ந்தார். 35 ரன்னுக்கு 2 விக்கெட்களை இழந்ததால், அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி 107 ரன்னுக்குள் சுருட்டலாம் என இந்திய வீரர்கள் போட்ட கணக்கு பொய்யானது. வில் யங் (48), ரச்சின் ரவீந்திரா (39) ஜோடி விக்கெட்டை பறிகொடுக்காமல் அணியை வெற்றிப்பெற செய்தனர். 27.4 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி 8 விக்., வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. 2வது டெஸ்ட் புனேயில் 24ம் தேதி துவங்குகிறது.