கடந்த மாதம் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ‘லப்பர் பந்து’ திரைப்படம் வெளியானது. கிராமத்து பின்னணியில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுக்குள் ஏற்படும் குழு மோதலை மையப்படுத்தி வெளியான இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கும் அவர் கிரிக்கெட்டில் தீவிரமாக எதிர்க்கும் அட்டகத்தி தினேஷுக்குமான உறவு முறை வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டிருந்தது.
மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக, இளம் பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருந்த நடிகை சுவாசிகாவின் நடிப்பும் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றது. மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் கிரவுண்டின் பின்னணியில் அடிக்கடி ஒலிக்கும் இடம் பெற்றிருந்த மறைந்த கேப்டன் விஜயகாந்தின் ‘நீ பொட்டு வெச்ச தங்க குடம்’ என்கிற பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.
இந்தப் படம் வெளியாகி தற்போது ஒரு மாதம் ஆன நிலையில் கிட்டத்தட்ட 40 கோடி வசூலித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தற்போதும் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் சில திரையரங்குகளில் இந்தப் படம் ஓடிக்கொண்டிருப்பதை தொடர்ந்து 50 கோடி என்கிற வசூல் இலக்கை தொடலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதனாலேயே கடந்த அக்டோபர் 18ல் இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்னும் சில நாட்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது.