தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளுக்கு முதல் முறையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்தியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி, கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவுகள் இந்தாண்டு வெளியிடப்பட்டது.
இதையடுத்து, நியூயார்க்கில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளில், 11 லட்சம் பேர் படிக்கின்றனர். நகரின் பல்வேறு சமூக, கலாசார மரபுகளை மதிக்கும் வகையில், தீபாவளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக, நகர மேயர் அலுவலகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை கமிஷனர் திலீப் சவுகான் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டடம், தீபாவளியைக் குறிக்கும் வகையில், இளஞ்சிவப்பு நிறத்தில் நேற்று ஒளிர்ந்தது. இதற்கான முயற்சிகளை, நியூயார்க் வாழ் இந்தியர் சங்க கூட்டமைப்பு மேற்கொண்டது.