வவுனியாவில் (Vavuniya) தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் மூன்று வேட்பாளர்களின் வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, வாகனங்களின் சாரதிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வவுனியா காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (06) இடம்பெற்றுள்ளது.
தேர்தல் விதிமுறை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வேட்பாளரின் உருவப்படம் மற்றும் ஸ்டிக்கர் பொறித்த வாகனங்களில் வேட்பாளர்கள் பயணிக்க முடியும்.
இருப்பினும், வேட்பாளரின்றி அவருடைய உருவப்படம் அல்லது ஸ்டிக்கர் பொறித்த வாகனங்கள் பயணிப்பதற்கு தேர்தல் திணைக்களம் தடை விதித்துள்ளது.
இந்தநிலையில், குறித்த விதிமுறையை மீறி வவுனியாவில் வேட்பாளரின்றி வேட்பாளரின் ஸ்டிக்கர்களுடன் நடமாடிய மூன்று வாகனங்களே வவுனியாப் காவல்துறையினாரால் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ப.சத்தியலிங்கம், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் ரசிக்கா பிரியதர்சினி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரது படம் பொறித்த வாகனங்களே தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின் கைதானவர்களையும் மற்றும் வாகனங்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.