மறைந்த நடிகர் டெல்லிகணேசின் மறுபக்கம்!

பிரபல நடிகர் டெல்லி கணேஷ்(80) சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

சினிமா பயணம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்தவர் தான் நடிகர் டெல்லி கணேஷ்.

இவர் நடிப்பு மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞராகவும் திரைத்துறையில் பயணித்து வந்தார்.

கடந்த 1944ம் ஆண்டு நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ், சினிமாவுக்கு வர முன்னர் 1964 முதல் 1974 வரையிலான காலப்பகுதியில் இந்திய வான்படையில் பணியாற்றியுள்ளார்.

பின்னர், கடந்த 1976 ஆம் ஆண்டு பட்டின பிரவேசம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். “தக்‌ஷின பாரத நாடக சபா” எனப்படும் டெல்லி நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

நகைச்சுவை கதாபாத்திரம், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை ஏற்று நடிக்கக் கூடியவர்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் டெல்லி கனேஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

இவ்வளவு பிரபலமாக இருந்த நடிகர் டெல்லி கனேஷின் இறப்பு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உடல்நிலை சரியில்லாத நிலையில் இரவு 1 மணி அளவில் அவரின் உயிர் இந்த உலகை விட்டு பிரிந்தது.

மேலும், சென்னை ராமாவரத்தில் உள்ள டெல்லி கணேஷின் இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி கணேஷ் மறைவுக்கு அவரது ரசிகர்களும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.