குறும் செய்திகள் ஊடாக தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் எச்சரிக்கை!

குறுஞ்செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் எதிர்வரும் இரு நாட்களுக்கு கடுமையாக கவனம் செலுத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.

வேட்பாளர்களின் பெயர் மற்றும் போட்டி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு தொலைபேசி இலக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்திகள் தொடர்பில் இவ்வாறு கவனம் செலுத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் இன்று (12) பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க (R.M.A.L Ratnayake) குறிப்பிட்டுள்ளார்

இந்தநிலையில், தேர்தல் பிரசார நோக்கில் குறுஞ்செய்திகளை அனுப்பும் செயற்பாடுகளின் பின்னணியில் இருக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்கெடுப்பு நிலையங்கள்
அத்தோடு, வாக்கெடுப்பு நிலையங்களுக்கு தொலைபேசி மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்.எம்.ஏ.ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.