கடக்க முடியாத வேறுபாடுகளால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவகாரத்து செய்ய இருப்பதாக அவருடைய மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதனால் அவர்களுடைய 29வருட திருமண வாழ்க்கை முறிவடைந்துள்ளது. தனது வழக்கறிஞர் மூலம் சாய்ரா பானு விவாகரத்து தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இசைப்புயல், மொசார்ட் ஆஃப் மெட்ராஸ், ஆஸ்கர் நாயகன் அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அவருடைய மனைவி அறிவித்துள்ள விவாகரத்து முடிவு பேரிடியை கொடுத்துள்ளார். 1992ல் ரோஜாவில் அறிமுகமாகி தேசிய விருது வென்று தொடர்ச்சியாக எண்ணற்ற வெற்றி படங்களுக்கு தூணாக விளங்கிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் விவாகரத்து விஷயம் பின்னடைவாக அமைந்துள்ளது. 1995ல் ஏ.ஆர்.ரஹ்மானும் – சாய்ரா பானுவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா விவாகரத்து தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு விவாகரத்து
விவாகரத்து அறிக்கையில் 29 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு சாய்ரா பானு விலக முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கடினமான எனவும் சாய்ரா பானு கூறியுள்ளார். திருமண உறவில் உணர்ச்சிவசப்படும் அளவிற்கு சில விஷயங்கள் நடந்த காரணத்தால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக காதலித்த போதிலும் கடக்க முடியாத அளவில் வேறுபாடு உண்டாகிவிட்டதாகவும் மீண்டும் ஒரு இணைப்பு பாலம் உருவாகும் என்ற நம்பிக்கை இருவருக்கும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகுந்த வலி மற்றும் வேதனையில் இந்த முடிவை சாய்ரா பானு எடுத்துள்ளார். மிகவும் சிரமமான இந்த நேரத்தில் சாய்ரா பானுவின் தனியுரிமைக்கு முன்னுரிமை அளித்து அவருடைய நிலைமையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.