ரி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.
தென் ஆபிரிக்காவிற்கு எதிரான கடைசி 2 ரி20 போட்டிகளில் தொடர்ந்து சதம் அடித்த திலக் வர்மா (Tilak Varma) , இதனையடுத்து விளையாடிய சயத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியிலும் சதம் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
சயத் முஷ்டாக் அலி கோப்பை (Syed Mushtaq Ali Trophy) தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
3 சதங்கள்
அதில் இன்று (23) ஐதராபாத் – மேகாலயா அணிகள் மோதின. இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற மேகாலயா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 248 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய மேகாலயா அணி 69 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஐதராபாத் அணித்தலைவர் திலக் வர்மா 67 பந்துகளில் 151 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம் சயத் முஷ்டாக் அலி கோப்பை வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்தியர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.