ராஜபக்சர்களால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம்

2023 ஆம் ஆண்டு மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் செலவு வருமானத்தை விட எட்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த ஆண்டு அதன் செயற்பாட்டுச் செலவு 2,412.09 மில்லியன் ரூபா என்பதுடன் வருமானம் 288 மில்லியன் ரூபா மாத்திரமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2023ஆம் ஆண்டு விமான நிலையத்திற்கு 2,124 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2018 முதல் 2023 வரையான 06 வருட காலப்பகுதியில் வரி செலுத்தியதன் பின்னர் மத்தள விமான நிலையத்தின் திரட்டப்பட்ட நிகர இழப்பு 38,489 மில்லியன் ரூபாவாகும்.

வருடாந்த பயணிகளின் எண்ணிக்கை
மேலும், விமான நிலையத்தின் வருடாந்த பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக இருந்தாலும், கடந்த 6 வருடங்களில் 190 முதல் 750 பயணிகள் வரை மாத்திரமே அங்கு வந்துள்ளதாக கணக்காய்வு அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அத்ததோடு, 06 வருடங்களாக 2,182 விமானங்கள் மாத்திரமே இயக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மத்தள சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக செலவிடப்பட்ட 35,364 மில்லியன் ரூபா பணம் உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.