தமிழ் சினிமாவில் சாதிச் சண்டையை மையமாக வைத்து படம் எடுத்தால் கவனத்தை ஈர்க்கலாம் என சிலர் நினைக்கிறார்கள். அப்படியான ஒரு படமாகத்தான் இந்தப் படமும் எடுக்கப்பட்டுள்ளதோ என்ற ஐயம் படம் ஆரம்பமான உடனேயே வந்துவிடுகிறது.
கடந்த சில வருடங்களில் மட்டும் இப்படியான படங்கள் வந்து மக்களிடம் சாதிய வேறுபாட்டு வன்மத்தைத் தூண்டிவிடுகிறதோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. இந்தப் படத்தில் அந்த சாதிய வன்மத்தை தேவையான அளவில் காட்டிவிட்டு, அப்படியே இன வன்மத்தை நோக்கி நகர்த்தி, கடைசியில் அறிவுரை சொல்லி முடிக்கிறார்கள். காட்ட வேண்டியதை எல்லாம் காட்டிவிட்டு, கடைசியில் அறிவுரை என்ற பெயரில் சில கருத்துக்களைச் சொல்லிவிட்டு நல்ல படம் என பெயரெடுக்க நினைத்துள்ளார் இயக்குனர் எழில் பெரியவேடி.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. அங்கு வீரத் தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் ஆதிக்க சாதி மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் ஊரின் இரண்டு பக்கங்களில் வசிக்கிறார்கள். இருவரும் ஒரே குலதெய்வத்தைக் கும்பிட்டாலும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்கிறார்கள். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஹரிசங்கர் மீது ஆதிக்க சாதியைச் சேர்ந்த சங்கீதா காதல் கொள்கிறார். ஆனால், ஹரி அந்தக் காதலை ஏற்கவில்லை. இரண்டு சாதி மக்களுக்கும் இடையில் இருக்கும் நிரந்தர மோதல்தான் அதற்குக் காரணம்.
வருடத்திற்கு மூன்று மாதங்கள் பெங்களூரு சென்று ஜுஸ் பேக்டரியில் கூலி வேலை செய்ய அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலர் போவார்கள். அப்படி ஹரிசங்கர், சங்கீதா உள்ளிட்ட இரண்டு சாதிக்காரர்கள் பலர் போகிறார்கள். அங்கு கன்னட அமைப்பைச் சேர்ந்த புகழ் மகேந்திரனுக்கும், சங்கீதாவுக்கும் சண்டை வர, புகழை அடித்துவிடுகிறார் சங்கீதா. இதனால், ஆத்திரமடையும் தமிழகத்திலிருந்து வந்த இந்த கூலி தொழிலாளர்கள் வேலை செய்யக் கூடாதென எதிர்க்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தில் பாராட்ட வேண்டிய விஷயம் என்று சொன்னால் திருவண்ணாமலை கிராமம் சம்பந்தப்பட்ட காட்சிகள். அந்த கதைக்களம், கதாபாத்திரங்கள், ஊர் மக்கள் என பலவும் நேரில் பார்ப்பது போன்ற ஒரு பதிவாக அமைந்துள்ளது. அது போல பெங்களூரு ஜுஸ் பேக்டரி சம்பந்தப்பட்ட காட்சிகளும் அமைந்துள்ளன. ஆனால், அந்த உருவாக்கம் மட்டும் படத்திற்குப் போதாது.
ஒடுக்கப்பட்ட சாதி இளைஞனாக ஹரிசங்கர் நடித்துள்ளார். தங்கள் சாதி மக்கள் மீது ஆதிக்க சாதி மக்கள் வெறுப்பைக் காட்டுவதைப் பார்த்து தேவையான நேரத்தில் எதிர்க்கிறார், மற்ற நேரங்களில் ஒதுங்கிப் போகிறார். குறிப்பாக எதிர் சாதியைச் சேர்ந்த சங்கீதா தன்னை நெருங்கி வரும் போதெல்லாம் அதைத் தவிர்த்துவிட்டு விலகிச் செல்கிறார்.
சங்கீதா கல்யாண் அந்த கிராமத்துப் பெண்ணாகவே மாறியிருக்கிறார். அவர்கள் எப்படி ஆடை அணிவார்கள், எப்படி நடப்பார்கள், பேசுவார்கள், பார்ப்பார்கள் என்பதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். நேரில் பார்த்த போது அவரா இவர் என ஆச்சரியப்பட வைத்தார். முயற்சி செய்தால் தமிழ்சினிமாவில் ஒரு வலம் வரலாம்.
படத்தில் காட்டப்படும் திருவண்ணாமலை மாவட்டம், இராசாபாளையம் கிராமத்தின் சந்து, பொந்துகள், வயல் வரப்பு, காடு, மேடு என அனைத்திலும் கதாபாத்திரங்களுடன் சேர்ந்தே ஓடியாடி நடந்து பயணித்திருக்கிறது ஸ்ரீதர் கேமரா. ஷான் ரோல்டன் பின்னணி இசையும் சில பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.
படத்தின் கிளைமாக்சில் காட்டப்படும் கொடூரமான துன்புறுத்தல்களைப் பார்க்கவே முடியவில்லை. தமிழ் சினிமாவில் இதுவரை காட்டாத அளவிற்கு கொடுமைகளைக் காட்ட வேண்டும் என நினைத்திருக்கிறார் இயக்குனர். அது ஒரு கட்டத்தில் ரசிக்கும் விதத்தில் எல்லை மீறும் என்பதை அவர் யோசித்துப் பார்க்கவில்லை. ஆரம்பத்திலிருந்து சாதி மோதல்கள், பின்னர் தமிழர், கன்னடர் மோதல் என காட்டிவிட்டு கடைசியில் ஆறுதல் சொல்கிறோம், ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறோம் என முடித்திருக்கிறார்கள். ஒருவரை அடி அடி என அடித்து விட்டு கடைசியில் அடித்தவரே அவருக்கு மருந்து போட்டுவிடுவது போல இருக்கிறது இது.