இலங்கை கைதிகளை நாட்டுக்கு அனுப்பிய குவைத்

குவைட் மத்திய சிறைச்சாலையில். சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இலங்கை கைதிகள் 104 பேரில் 32 பேர், வரலாற்றில் முதல் தடவையாக குவைத்தில் இருந்து விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை திங்கட்கிழமை (25) மதியம் வந்தடைந்தனர்.

குவைத் நாட்டிலிருந்து புறப்பட்ட குவைத் விமானப்படைக்கு சொந்தமான KAF-3223 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை திங்கட்கிழமை (25) பிற்பகல் 02.30 மணியளவில் வந்தடைந்தது.

வரலாற்றில் முதல் தடவை
குவைத் அரசுக்கும் இலங்கைக்கும் இடையில்2007 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், அந்நாட்டின் அரசாங்கத்தால் இவர்கள், இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

குவைத் நாட்டில், ஆபத்தான போதைப்பொருள் பாவனை, வர்த்தகம் மற்றும் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு குற்றவாளிகளாகக் காணப்பட்ட இலங்கையர்கள் அடங்கிய ஒரு குழுவே நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம், கைதிகள் சிலரை இலங்கைக்கு அனுப்ப கடந்த மார்ச் மாதம் முதல் முயற்சித்து வந்தார். பின்னர், குவைத் அரசர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடன் இலங்கைத் தூதுவரின் நெருங்கிய உறவுகளைப் பயன்படுத்தி, அவர்களுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி, குவைத் விமானப்படையின் மிகப்பெரிய சி-17 விமானத்தின் மூலம் அவர்கள் அழைத்துவரப்பட்டனர்.

இந்த இலங்கைக் கைதிகளை இலங்கையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இந்த நாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் குவைத் கைதிகள் எவரும் இல்லை என்பது விசேட அம்சமாகும்.

குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் குவைத் நகர விமானப்படைத் தளத்திற்கு திங்கட்கிழமை (25) சென்று இலங்கைக் கைதிகளை ஏற்றிச் செல்லும் சிறப்பு விமானம் புறப்படுவதை அவதானித்ததுடன், இந்த விமானம் உள்ளூர் காலை 07.06 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டது.

இந்த விமானத்தில் கைவிலங்குகளுடன் இலங்கை கைதிகள் வந்துள்ளனர், அவர்களுடன் குவைத் அரசின் பாதுகாப்பு அதிகாரிகள், உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் அடங்கிய குழுவும் இருந்தனர்.

இலங்கை சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று பேருந்துகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்து கைதிகளை வெலிக்கடை சிறைக்கு அழைத்துச் சென்றனர். இந்த குவைத் அதிகாரிகள் குழுவுடன் இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குவைத் நோக்கி, செவ்வாய்க்கிழமை (26) புறப்பட உள்ளது.