பலத்த மழை காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு நகரின் பெரியமுல்லை பிரதேசத்தின் ஊடாக ஊடறுத்துச் செல்லும் தெபா எல பெருக்கெடுத்ததன் காரணமாக அங்குள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
உறவினர்கள் நண்பர்களுடைய வீடுகளில் தஞ்சம்
பெரியமுல்லை பிரதேசத்தில் தெனியாயவத்த, ரப்பர் வத்த, கோமஸ்வத்த உட்பட பல பிரதேசங்கள் மற்றும் உள்வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்ட சிலர் உறவினர்கள் நண்பர்களுடைய வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் கட்டுவ புவக்வத்த பிரதேசத்தில் உள்ள பல வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதேவேளை தழுவகொட்டுவ முதலாம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மேல் இன்று நள்ளிரவு 12 மணியளவில் மரம் ஒன்று விழுந்ததன் காரணமாக வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 29 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை (27) காலை 9:30 மணியளவில் நீர்கொழும்பு பிரதேச செயலாளர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதுடன் விழுந்துள்ள மரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார்.