நயன்தார மீது தனுஷ் வழக்கு!

நடிகை நயன்தாரா அண்மையில் தனது 40வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி, அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஆவணப் படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில், தனது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா நடித்து, சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘நானும் ரவுடி தான்’ படத்தின் பாடல்களையும், காட்சிகளையும் பயன்படுத்த அவர்கள் விரும்பினர். இதற்காக 2 ஆண்டுகளாக அனுமதி கேட்டும், அப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஆவணப்படத்தின் டிரைலரில் நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் தன்னுடைய அனுமதி இல்லாமல் 3 வினாடி காட்சிகளைப் பயன்படுத்துவதற்கு நயன்தாராவிடம் ரூ.10 கோடி அபராதம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் தனுஷ். இதனால், நேரடியாக தனுஷை விமர்சித்து நயன்தாரா அறிக்கை விட்டார். இதற்கு, பல நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர். இது தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவரது பிறந்தநாள் அன்று வெளியான அந்த ஆவணப்படத்தில் சுமார் 37 வினாடிகள் நானும் ரவுடி தான் படக்காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மும்பையைச் சேர்ந்த நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னையில் வசிப்பதாகக் கூறி, இந்த வழக்கை தாக்கல் செய்ய வொண்டர்பார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.