தயாரிப்பு – டி கிரியேஷன்ஸ்
இயக்கம் – பாலாஜி கேசவன்
இசை – நிவாஸ் கே பிரசன்னா
நடிப்பு – அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி
வெளியான தேதி – 22 நவம்பர் 2024
நேரம் – 1 மணி நேரம் 52 நிமிடம்
ரேட்டிங் – 2.5/5
படத்தின் தலைப்பே இது என்ன மாதிரியான கதை என்பதை சொல்லிவிடுகிறது. இயக்குனர் பாலாஜி கேசவன் கலகலப்பான ஒரு காதல் கதையைக் கொடுக்க முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். கொஞ்சம் பழைய பார்முலா கதை என்றாலும் படத்தில் நடித்துள்ளவர்களின் நடிப்பு படத்தை ரசிக்கக் காரணமாக அமைந்துவிட்டது.
சினிமாவில் உதவி இயக்குனராக இருப்பவர் அசோக் செல்வன். தனியார் மருத்துவமனையில் நர்ஸ் ஆக வேலை பாரக்கும் அவந்திகா மிஸ்ராவைப் பார்த்த முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறார். சில பல முயற்சிகளுக்குப் பிறகு அவந்திகாவின் மனதிலும் இடம் பிடித்து விடுகிறார். இந்நிலையில் அசோக் செல்வனின் தோழியான மதுமிலா கருக்கலைப்பு செய்வதற்கு அசோக் செல்வனை கணவனாக நடிக்கும்படி கேட்கிறார். அதைப் பார்க்கும் அவந்திகாவின் தோழி தவறாகப் புரிந்து கொண்டு அவந்திகாவிடம் போட்டுக் கொடுக்கிறார். இதனால், ஆத்திரமடையும் அவந்திகா, அசோக் செல்வனை விட்டுப் பிரிகிறார். தன் மீது எந்தத் தவறும் இல்லை என புரிய வைக்கும் முயற்சியில் இறங்குகிறார் அசோக். அதில் வெற்றி பெற்றாரா, பிரிந்த காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
காதலும், காமெடியும் கலந்த கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார் அசோக் செல்வன். இந்தப் படத்தை ரசிக்க முடிவதற்கு அவர்தான் முக்கியக் காரணம். ஒரு சில கதாநாயக நடிகர்களுக்கு மட்டும்தான் காமெடியும் நன்றாக வருகிறது. இதற்கு முன்பும் சில படங்களில் காமெடியும் கலந்த கதாபாத்திரங்களில் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் அசோக் செல்வன். இந்தப் படத்திலும் அப்படியான பாராட்டுக்களைப் பெறுவார்.
அசோக் செல்வனின் காதலியாக, நர்ஸ் கதாபாத்திரத்தில் அவந்திகா மிஸ்ரா. பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். ஆனால், நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். எப்போதும் சோகமாக இருக்கும் ஒரு முகபாவத்துடனேயே இருக்கிறார்.
காதலிக்கும் நாயகன் என்றால் கண்டிப்பாக நண்பர்கள் இருப்பார்கள். இந்தப் படத்தில் அசோக் செல்வனின் காதலுக்கு உதவி செய்பவர்களாக பகவதி பெருமாள், விஜய் வரதராஜ் நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் அக்காவாக சோனியா, மாமாவாக படவா கோபி, அம்மாவாக ஊர்வசி, அப்பாவாக அழகம் பெருமாள் ஆகியோர் சில காட்சிகளில் நடித்திருந்தாலும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.
நிவாஸ் கே பிரசன்னா பின்னணி இசையில் கொஞ்சம் பழைய பார்முலா வாசம் அடிக்கிறது. இம்மாதிரியான காதல் படங்களில் ஒரு சில பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனால் படத்திற்கு உதவியாக இருந்திருக்கும். காதல் படங்களுக்கேற்ப பளிச்சென்ற ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் கணேஷ் சந்திரா.
பழைய பாணி கதை, காட்சிகள் என்பதுதான் படத்தின் குறை. இருந்தாலும் அதையும் ரசிக்க முடிவதற்குக் காரணம் படத்தில் நடித்துள்ளவர்கள்தான் என்பதை ஆரம்பத்திலேயே சொன்னோம். படத்தின் முதல் பாதியில் சில காட்சிகள் நீளமாக அமைந்து போரடிக்க வைக்கின்றன. குறிப்பாக பாலாஜி தரணிதரன் சம்பந்தப்பட்ட காட்சி. முதல் பாதியைக் கொஞ்சம் சரி செய்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். ஆனால், இரண்டாவது பாதியில் அதை சரி செய்திருக்கிறார்கள்